நலமான வாழ்க்கைக்கு மறதியின்மை
மறதி என்ற நோய் இப்பொழுது பலருக்கு இளைஞர் முதல் முதியவர்களுக்கும் உருவாகி வருகிறது. இந்த நோயை அல்ஜிமெர் என்று அழைப்பர். இந்த நோய் இருப்பவர்கள் படித்தவற்றை உடனே மறந்து விடுவர். முக்கியமான நிகழ்வுகள் நடந்த நாட்களை மறந்து விடுவார்கள். சில பெயர்களை மறந்துவிட்டு பின்னர் அவர்கள் அதை ஞாபகத்திற்கு கொண்டு வருவர். அவர்கள் காசோலை போன்ற முக்கியமான காரியங்களை எழுதும் பொழுது பல தவறுகளை உருவாக்குவார்கள்.
குடும்பம் மற்றும் வேலை சார்ந்த காரியங்களில் நினைவு இழப்பு உருவாகும். நேரம், இருக்கும் இடம் ஆகியவற்றில் குழப்பங்கள் ஏற்படும். பேசுவது. மற்றும் எழுதுவதில், சரியான வார்த்தை உபயோகிப்பதில் சிக்கல்கள் ஏற்படும். ஒரு பொருளை வைத்துவிட்டு அதைத் தேடிக்கொண்டிருப்பார்கள். பொருள்களை அதற்கென்று உள்ள இடத்தில் வைக்காமல் இருப்பார். பிரச்சனைகளுக்கு ஒரு முறையான முடிவு எடுக்க முடியாமல் திணறுவார்கள். வேலை, குடும்பம் மற்றும் சமூகப் பொறுப்புகளில் இருந்து ஒதுங்கி இருப்பர். இப்படிப்பட்டவர்கள் சமூக நடவடிக்கைகள், விளையாட்டுகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தலாம். அவர்களுடன் இருப்பவர்கள் அவர்களுக்கு தக்க உதவியாக இருக்கலாம்.
மறதிக்கு காரணங்கள்:- தூக்கமாத்திரைகள், இரத்தகொதிப்பு மாத்திரைகள், மன நோய் மாத்திரைகள், வலிப்புக்கு உபயோகப்படுத்தும் மாத்திரைகள் மறதியை அதிகமாக்கும். மனநோய், மன அழுத்தம் இந்த நோய்க்கு ஒரு முக்கியமான காரணமாகும். போதைபொருள் உபயோகம், மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் இருப்பது மறதியை அதிகமாக்கும். புற்றுநோய், எயிட்ஸ், மூளை அறுவை சிகிச்சை, கதிர் மருத்துவங்கள், இருதய அறுவை சிகிச்சை, நடுக்குவாத நோய், நரம்புச் சிதைவு நோய். ஒற்றைத் தலைவலி. ஆகியவைகள் மறதிக்கு காரணங்கள் ஆகும். மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையின் பழைய புகைப்படங்களைப் பார்த்து பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து ஞாபக சக்தியை அதிகரிக்க பயிற்சி செய்யலாம்.
காலையில் எழுந்த உடன் முன் தினம் நடந்த நினைவுகளை நினைவுக்கு கொண்டு வந்து ஞாபக சக்தியை அதிகரிக்கலாம். ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுவதால் ஞாபக சக்தியை அதிகரிக்கும். நஞ்சுத்தன்மை கொண்ட உணவுகள், போதைப் பொருள்களை உபயோகிப்பதை நிறுத்தலாம். அதிக நீர் உட்கொள்ளவேண்டும். தூக்கத்தையும், மன அமைதியையும் சரியானபடி உருவாக்கி கொள்ளவேண்டும். உணவில் வைட்டமின்கள், மற்றும் தாதுப்பொருள்களை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
அதற்கு பிராணாயாமம் ஒரு சிறந்த மருந்தாகும். பிராணாயாமம் செய்வதற்கு என்று ஒரு காற்றோட்டமான இடத்தை தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். பத்மாசனத்தில் அமர்ந்து உங்களில் இயங்கும் சுவாசத்தை உற்று நோக்குங்கள். மனிதன் வாழ்க்கையில் எப்பொழுதும் சுவாசம் செய்து கொண்டிருக்கிறான். இந்த சுவாசத்தை ஒரு யோகமாக கருதப்படுகிறது. இந்த யோகத்தை ஹம்ஸம் யோகம் என்பர். ஒரு மனிதன் ஸம் என்று சுவாசத்தை இழுக்கிறான். ஹம் என்று மூச்சுக் காற்றை வெளியிடுகிறான். இவ்வாறு இயற்கையாக நடைபெறும் சுவாசத்தை ஒரு மந்திர பூர்வமான யோகமாக ஹம்ஸ உபநீதம் கூறுகிறது.
பிரணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சி நான்கு நிலைகளை உடையதாக இருக்கிறது. ஒன்று சுவாசத்தை இழுப்பது, இதை பூரகம் என்பர். இவ்வாறு உள்ளே இழுத்த சுவாசத்தை நிறுத்தி வைப்பதற்கு கும்பகம் என்று பெயர். இவ்வாறு உள்ளே நிறுத்தி வைத்த சுவாசத்தை வெளியிடுதலை ரேசகம் என்று பெயர். அவ்வாறு சுவாசத்தை வெளியிட்ட பின்னர் அடுத்து சுவாசத்தை இழுக்காது வெளியே நிறுத்தி வைப்பதற்கு பகிரங்க கும்பகம் அல்லது கேவல கும் பகம் என்று பெயர். சுவாச பயிற்சி செய்வதற்கு கையில் உள்ள சுட்டுவிரலையும், நடுவிரலையும் மடித்து வைத்து அப்பியாசம் செய்யவேண்டும். பிராணாயாமம் என்பது ஒரு சுவாச பயிற்சி. உச்சந்தலையில் இருந்து ஆரம்பித்து நெற்றிப் பொட்டில் கொண்டு வந்து அதன்பின் உள்நாக்கு வழியாக இழுத்து குறுக்கெழும்பின் நடுப்பகுதியின் வழியாக மூலாதாரத்திற்கு சுவாசத்தை எடுத்துச் செல்வது போல் சங்கல்பம் செய்து சுவாசத்தை மூலாதாரத்தில் தேக்கி வைத்து பின்னர் அதே பாதையாகிய முதுகெலும்பின் நடுவின் வழியாக உள்நாக்குப் பகுதியில் சேர்த்து அங்கிருந்து புருவ மத்திக்கு வந்து உச்சந்தலை வழியாக சுவாசத்தை விடுவது போல சங்கல்பம் செய்வதாகும். இந்த பயிற்சிக்கு உங்கள் மதம் சார்ந்த மந்திரங்களை உபயோகப்படுத்தலாம்.
ஞாபக மறதிக்கு நீர் பிரமி ஒரு சிறந்த மூலிகையாகும். இதற்கு சரஸ்வதி என்ற பெயரும் உண்டு. நீர் சதுப்பான இடங்களில் நீள வட்டவடிவமுடைய இலைகளைக் கொண்ட படரும் சிறு கொடியாகும். இந்த மூலிகையைப் பற்றி பல ஆய்வுகள் நடந்துள்ளது. எல்லா ஆய்வுகளிலும் இது ஒரு சிறந்த ஞாபக சக்தியை உருவாக்கும் மூலிகை என்று ஆய்வில் கண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக