JavaScript



நலமான வாழ்க்கை
க்கு தன்னம்பிக்கை

           தன்னம்பிக்கை இல்லாதவனைத் தான் நான் நாஸ்திகன் என்கிறேன் என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். தற்பொழுது தன்னம்பிக்கை குறைந்த சமுதாயம் உருவாகி வருகிறது. தன்னம்பிக்கை குறைவுக்கு பல காரணங்கள் உள்ளன. உடல் ஆரோக்கிய குறைவு, பொருளாதாரச் சிதைவு, நேர்மையற்ற அரசியல் முறைகள், அறமற்றச் சட்டங்கள், சமுதாய உயர்வு தாழ்வு போன்றவைகள் ஆகும். தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை உடையவர்களும், தன்னைப் பற்றி அதிக மரியாதை எதிர்பார்ப்பவர்களும், சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களும், அதிக உணர்சிவசப்படுபவர்களும், அதிக கவலைப்படுபவர்களும், எதிர்மறையான எண்ணங்களை உடையவர்களும், கற்பனை வளத்துடன் சிந்திப்பவர்களும், பல காரணங்களால் மக்களால் புறக்கணிக்கப்படுகிறவர்களும், அதிகம் தன்னம்பிக்கை இழந்தவர்களாக இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் தன்னம்பிக்கை பெறுவதற்காக பயிற்சிகள் எடுக்கவேண்டும்.
           உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும். உடை, நடை, பாவனை ஆகியவற்றில் உலகுக்கு உகந்த முறையில் சீராக்கி கொள்ளவேண்டும். ஒரு காரியத்தைச் செய்ய முயற்சி எடுக்கும் முன் அந்த காரியத்தால் ஏற்படும் நன்மை, தீமைகள், அதன் ஆரம்பம், முடிவு ஆகியவைகளை திட்டமிட்டு வெற்றிகரமாக முடிக்க முயற்சி செய்ய வேண்டும்.
           ஒரு காரியத்தை செய்வதற்கான விருப்பமும், அதை நடத்திச் செல்லும், துணிச்சலும், உடையவராக இருக்கவேண்டும். மற்றவர்களிடம், பரிவும் பாசமும் கொள்ளவேண்டும். எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை ஒரு கட்டுப்பாடான முயற்சி தேவை. எந்த ஒரு காரியத்தையும் செய்யும் பொழுது பாதுகாப்பான வெற்றி உணர்வு தேவை. நீங்கள் செய்யும் காரியத்திற்கு காரணங்கள் தெரிந்து வைத்திருக்கவேண்டும். வரும் இழப்பீடுகளை கவனித்து அதை திரும்ப வராத வண்ணம் பார்த்து கொள்ளவேண்டும். எந்த ஒரு காரியத்தையும் முடிப்பதற்கான தன்னம்பிக்கை வேண்டும்.
           தன்னம்பிக்கை உருவாக்குவதில் கண்ணாடி தவம் பெரும் அளவில் உபயோகப்படுகிறது. கண்ணாடிப் பயிற்சி உலகெங்கும் வெற்றிகரமான பயிற்சியாக கருதப்படுகிறது. வெளிநாடுகளில் கண்ணாடிப் பயிற்சிகளின் மூலமாகத் தான் அதிதீவிர சக்தியை பெறுவதற்கு முதல் பயிற்சியாக கருதப்படுகிறது. கண்ணாடிப் பயிற்சி செய்வதற்கு அதிகாலை நேரம் சிறந்த நேரமாகும். பத்மாசனத்தில் அமர்ந்து ஓன்று அல்லது ஒன்றரை அடி தள்ளி உள்ள கண்ணாடியில் உங்கள் உருவம் முழுவதும் தெரியும்படி அமரவேண்டும். கன்னாடியானது ஒன்றரை அடி அகலமும், இரண்டரை அடி உயரமும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
           நீங்கள் முதலில் அந்தக் கண்ணாடியில் உங்கள் உருவம் முழுவதையும் ஆழ்ந்து கவனிக்கவும். பின்னர் கண்ணை மூடிக்கொண்டு உங்கள் உருவத்தை உங்களது மனக்கண்ணில் பார்க்கவும். இவ்வாறு பலமுறை செய்யவேண்டும். இந்த கண்ணாடி தவம் செய்யும்பொழுது முகத்தை சாந்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு முகத்தைப் பார்க்கும் பொழுது நான் தன்னம்பிக்கை உடையவன், நான் எல்லோராலும் நேசிக்கப்படுபவன் என்று சங்கல்பம் செய்யவேண்டும். வேண்டும் என்றால் தன்னை சூரியன் போல் பிரகாசமானவனாகவும், சூரியனைப்போல் சக்தி வாய்ந்தவனாகவும், சூரியனை போல நேர்மையானவனாகவும் சங்கல்பம் செய்ய வேண்டும். இதனால் தன்னம்பிக்கையும், காரியங்களை வெற்றிகரமாக நடத்தும் திறமையும் உருவாகும்.
           தன்னம்பிக்கை பெறுவதற்கு தன்னம்பிக்கையுடன் வேகமாக நடந்து செல்லுங்கள். செல்லும் இடங்களில் தன்னம்பிக்கையுடன் பேசுங்கள். பிறருக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சுக்களை பேசுங்கள். எல்லாக் காரியங்களுக்கும் நன்றி அறிதலை உங்களுக்குள் உண்டாக்கிக் கொள்ளுங்கள். மற்றவர்கள் செய்யும் நல்ல காரியங்களைப் பாராட்ட யோசிக்கவேண்டாம். பள்ளிகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் நடைபெறும் நிகழ்வுகளில் உங்களை அதில் உட்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை ஆய்ந்து முடிவு செய்து மற்றவர்களிடம் கூற யோசிக்கவேண்டாம். நல்ல காரியங்களில் உங்களுடைய பங்களிப்பு அவசியம். இது உங்களிடம் இருக்கும் தன்னம்பிக்கையை கூட்டும்.


1 கருத்து: