JavaScript


நலமான வாழ்க்கைக்கு மன அமைதி
          
இப்பொழுது மன அமைதியின்மையின் காரணமாக மனம் சார்ந்த நோய்களும், உடல் சார்ந்த  நோய்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலக சுகாதார நிறுவனம் மன அமைதியின்மையின் காரணமாக 12-1/2 சதவிகித மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றது.                                        மன அமைதியின்மை உருவாகி மருந்துகள் சாப்பிடுவதற்கு முன் சில எளிய வழிகள் மூலம் நம்மை தற்காத்துக் கொள்ளமுடியும்.
மன அமைதியின்மைக்கு பல காரணங்கள் கூறப்பட்டுள்ளது. போதுமான ஓய்வு இன்மை, பிரச்சனைகள், பிரச்சனைகளால் ஏற்படும் மன அழுத்தம், அதிக உழைப்பு, பொருளாதார தேவைகளின் குறைவு, வேலைகளில் உள்ள பிரச்சனைகள், உடல் நலக் குறைவு, தைராயீடு, ஆஸ்துமா, போன்ற சில நோய்களுக்கு உபயோகப்படுத்தப்படும் மருந்துகள், போதைப் பொருள்கள் உபயோகிக்கும் பொழுது சிறிது மன அழுத்தத்தை குறைத்தாலும் பின்னர்   மன அழுத்தத்தை அதிகமாக்கும். குடும்ப வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள், போட்டி, பொறாமை, மன அழுத்தத்தை அதிகரிக்க வைக்கிறது.
           மன அழுத்தத்தில் இருந்து விடுபட வாழ்க்கை வழிமுறையில் மாற்றங்கள் தேவை. நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ணவேண்டும். அத்துடன் போதுமான தூக்கம், மற்றும் உடற்பயிற்சி செய்யவேண்டும். போதைப் பொருள்களை முற்றிலும் நீக்கவேண்டும். யோகா, தியானம் ஆகியவைகள் மன அழுத்தத்திற்கு நல்ல வழிமுறையாகும். மன அழுத்தத்தால் இருதயம் அதிகம் துடித்து இரத்த அழுத்தத்தையும், இரத்தத்தில் கொழுப்புச் சத்தையும் உருவாக்குகிறது. மன அழுத்தம் காட்றிசோன் என்ற வேதியல் பொருளை உருவாக்கி தசை இறுக்கத்தை அதிகரித்து சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பை உருவாக்குகிறது. மன அழுத்தம், பசியின்மை, சோர்வு, தலைவலி, எரிச்சல், மயக்கம், நரம்புத் தளர்வு, ஆண்மைக் குறைவு, மலட்டுத்தன்மை, தூக்கமின்மை, வாயு, அஜீரணம், குடல்புண், வயிறு சரியின்மை, பதட்டம், பீதி மற்றும் மாரடைப்பு போன்றவைகளை உருவாக்கும்.
           கோபம், ஆணவம், மாயை, பேராசை, பொறாமை, வெறுப்பு, ஆகிய உணர்வு சார்ந்த எதிர்மறை எண்ணங்களால் மன அமைதி குறைகிறது. இவைகள் சுற்றுப்புற சூழ்நிலைகளாலும், பாரம்பரிய குண நலன்களாலும் உருவாக்கப்படுபவை ஆகும். இவற்றை நாம் பயிற்சியின் மூலமாக சரி செய்ய முடியும். மன அமைதிக்கு மிகவும் தேவையானது ஆன்மீக அருள் சக்தியாகும். ஆன்மீக அருள் சக்தி உடையவர்கள் மன அமைதியின்றி இருக்கமாட்டார்கள். அமைதியின்றி சலனம் அடையும் மனம் எல்லாவித பிரச்சனைகளையும் உருவாக்குகிறது.
           ஆன்மீக அருள் சக்தியை பெறுவதற்கு சிறந்த வழி யோகமாகும். ஆம் தியானத்தைப் பற்றி தான் நான் கூறுகின்றேன். தினமும் அதிகாலையிலும், மாலையிலும் குறைந்தது பதினைந்து முதல் முப்பது நிமிடங்கள் தியானத்தில் அமருங்கள். அப்படி எனில் எதை தியானம் செய்வது, எப்படி தியானம் செய்வது என்ற கேள்வி எழலாம். இந்த கேள்விக்கு ஒரு அறிஞர் கூறிய வாசகங்கள் நினைவுக்கு வருகின்றது. தன்னுள் இருக்கும் கடவுளைக் காணாதவன் எங்கும் கடவுளைக் காணான் என்பதே ஆகும். ஆம் நமக்கு ஒரு வழி பிறந்து விட்டது.
           உங்களுள் இருக்கும் உயர் சக்தியை நோக்கி உங்கள் தேவையை நினைத்து உங்களுக்குள்ளே தியானம் செய்யுங்கள். உடம்பில் பல ஆதார சக்திகள் இருக்கின்றன. அவைகள் பஞ்சபூத இயக்கத்தைச் சார்ந்து செயல்படுகின்றது என்று யோக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இவற்றின் மூலம் அதிதீவிர சக்தியைப் பெறமுடியும் என்று எனது குருமார்கள் கூறியது உண்டு. இருப்பினும் நமது இரு புருவங்கள் சேரும் நெற்றிப் பொட்டை தியானத்தின் இடமாக நினைப்பது சிறந்ததாகும். அவ்வாறு தியானம் செய்யும்பொழுது உங்கள் மதத்தைச் சார்ந்த மந்திரங்களை உச்சரிக்கவும் செய்யலாம். இத்தகைய தியானம் மன அமைதியின்மையை நீக்கி மனதிற்கு சாந்தம் அளிப்பதுடன் ஒருவித ஆக்கப்பூர்வமான சக்தியை உருவாக்குகின்றது.
             மேலும் மன அமைதியின்மைக்கு உரிய உகந்த மூலிகை ஆராக்கீரை ஆகும். இது தண்ணீரில் நான்கு இலைகளுடன் கூடி மிதக்கும் ஒரு செடி ஆகும். இந்த மூலிகையை காலையும், இரவும் சமைத்தோ, அல்லது காய வைத்து பொடி செய்தோ சாப்பிட்டால் மன கலக்கங்களைக் குறைக்கும். குழந்தைகளுக்கு மன கலக்கத்தால் இரவு நேரங்களில் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை குறைக்கும் தன்மை உடையது. அடிக்கடி வலிப்பு நோயால் பாதிக்கப்படுபவருக்கு இது ஒரு நல்ல மூலிகை ஆகும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக