JavaScript



வாழ்க்கை நெறியும், ஆரோக்கியமும்

           நமது வாழ்க்கையில் வாழ்க்கை நெறியும், அனுஸ்டானங்களும், ஆச்சாரங்களும், செயல்பாடுகளும், நமது ஆரோக்கியத்தை நிலைப்படுத்துவதில் முக்கிய பங்கு வைக்கிறது. இப்பொழுது இத்தகைய ஆச்சார நெறிகளைக் கடைப்பிடிக்காததால் மன அமைதியை இழந்து பற்பல நோய்களின் தாக்கத்துடன் வாழ்கின்றோம். நம்முடைய கலாச்சாரம் வெட்பதட்ப நிலைமைகள், சுற்றுப்புற சூழ்நிலைகளை  வைத்து நமது முன்னோர்கள் வாழ்க்கை நெறிமுறைகளை அமைத்துள்ளனர். பொதுவாக காலை மூன்றரை மணியில் இருந்து ஐந்து மணிக்குள் எழுந்து இறைவனை வேண்டுவதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் உகந்த நேரமாகும்.
           இந்த நேரத்தில் உலக இயக்கம் அடங்கி அமைதியாக இருக்கின்றது. உடலுக்கு ஆரோக்கியத்தையும், அறிவுக்கு ஆற்றலையும் கொடுக்கும் ஓசோன் - காற்று மண்டலத்தில் அதிகமாக உள்ளது. இந்த நேரத்தை நாம் சிறப்புற பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஆரம்ப காலங்களில் இது சிரமமாக இருந்தாலும் பிற்காலங்களில் இது மிகவும் எளிதாக தோன்றும். காலைக் கடன்களை முடித்து விட்டு அமைதியான சூழ்நிலையில் சுவாசப்பயிற்சி செய்து இறை ஆற்றலை அதிகம் நம்முள் தேக்கி வைக்க தியானம் அல்லது பூஜை அல்லது இறை வேண்டுதல்களைச் செய்வோமாக. பின்னர் உலக நிகழ்வுகளை அறிய சமநிலை கொண்ட ஒரு தரமான பத்திரிக்கையை வாசியுங்கள். பின்னர் சுய முன்னேற்றம், நல்ல கருத்துக்கள், ஆன்மீகம் கூறும் நல்ல நூல்களை வாசித்துவிட்டு உணவு உண்ணச் செல்லுங்கள். உணவு உண்ணும் பொழுது மனநிலையைச் சமமாக வைத்துக் கொள்ளுங்கள். உணவை உண்ணும் பொழுது மென்று சுவைத்து சாப்பிடுங்கள். ஏனெனில் உணவு வாயில் உள்ள உமில்நீரிலே செரிமானத்திற்கு உட்படுகிறது. சாப்பிடும் பொழுது டி.வி பார்த்தல், புத்தகம் படித்தல், செல்போன் பேசுதல் போன்ற காரியங்களில் ஈடுபடவேண்டும். தாகத்திற்கு ஏற்ப நன்கு தண்ணீர் குடிக்கவும்.
           ஆரோக்கியமான உணவை ஆரோக்கியமான மனநிலையில் உண்ணப் பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் தங்கும் இடம் காற்றோட்டமானதாகவும், வெளிச்சமுள்ளதாகவும் இருக்கட்டும். பொதுவாக பசி எடுத்த உடன் உணவை உட்கொள்ளவும். வயிறு நிறைந்து திணறும் வகையில் உணவை உண்ணவேண்டாம். உங்கள் வேலையை விரும்பி மன மகிழ்ச்சியுடன் செய்து பழகுங்கள். உங்கள் வேலையை நீங்கள் நேசிக்கப் பழகாவிட்டால் அந்த வேலை உங்களுக்கு கஷ்டமாகத் தெரியும். மாலை நேரங்களில் உடல் ஆரோக்கியத்திற்கு என்று பயிற்சியில் ஈடுபடுங்கள், அல்லது தினம் முப்பது நிமிடங்களில் இருந்து நாப்பது நிமிடங்கள் வரை நடைப்பயிற்சியில் ஈடுபடுங்கள். அவ்வாறு நடைப்பயிற்சியில் ஈடுப்படும் பொழுது ஆன்மீக சங்கல்பத்துடன் செயல்படுவது சிறப்பாகும்.
      பொதுவாக தியானம், பூஜை போன்ற ஆன்மீக தேடுதலில் ஈடுபடும்பொழுது உணர்ச்சி வசப்பட்டு உங்கள் ஆன்மீக அருள் சக்தியை விரயம் செய்யாதிருங்கள். அமைதியைத் தேடி கடவுளை வேண்டும்பொழுது நாம் ஏன் உணர்ச்சி வசப்பட்டு ஆன்மீக அருள் சக்தியை இழக்கவேண்டும். இயற்கையான சூழ்நிலையில் இயற்கையான வாழ்க்கையை நடத்த முயலுங்கள். இரவு நேரங்களில் படுக்கைக்கு செல்லும்பொழுது அமைதியான சூழ்நிலையில் படுக்கைக்கு செல்லுங்கள். பூமியில் உள்ள மின்காந்த அலைகளை மனதில் வைத்து தெற்கு பக்கம் தலையை வைத்து படுங்கள். அது உங்களுக்கு ஆரோக்கியம், மற்றும் வளமான வாழ்வுக்கு வழிவகுக்கும். படுத்து தூங்க ஆரம்பிக்கும் பொழுது மூச்சை நன்றாக இழுத்து விட்டு சுவாச ஓட்டத்தை செயல்படுத்துங்கள். இது காலையில் நீங்கள் எழும்பொழுது உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள். ஏனெனில் படுக்கும்பொழுது உள்ள சுவாசஓட்டம் தூங்கும்பொழுது சீராகச் செயல்படுவதால் ஆழமான சுவாசம் உங்கள் உடம்புக்குத் தேவையான ஆக்சிஜனைக் கொடுக்கும்.
            செயற்கைப் பானங்கள், காபி, டீ முதலியவைகளைக் குடிப்பதற்கு பதில் உங்கள் பொருளாதார வசதிக்கு ஏற்ப நெல்லிக்காய், தக்காளி, ஆரஞ்சு போன்ற பழங்களின் சாறுகளைக் குடிக்கவும். இரவில் பல் துலக்குவதால் இருதய நோய்களில் இருந்து விடுபடமுடியும் என்று பல ஆய்வுகள் கூறுவதால் தினம் காலையும், இரவும் பல் துலக்குங்கள். மனநிலையும், உடல்நிலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். அது நலமான வாழ்வுக்கு வித்திடும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக