JavaScript


ஆரோக்கியமும், சுகாதாரமும்

     சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி. சுகாதாரம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒரு ஊன்றுகோலாக அமைகிறது. தற்கால மருத்துவ ஆய்வாளர்கள் சுகாதாரமான வாழ்கையின் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை பெற முடியும் என்று கூறுகின்றனர். வீடு, வேலை செய்யும் இடம், பொது இடங்கள், போக்குவரத்து இடங்களில் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். இதனால் தொற்றுநோய் பரவுவதை தடுக்கமுடியும். பொதுவாக இல்லங்களில் தொற்றுநோய் உடம்பின் மூலமாகவோ, வீட்டில் வளரும் செல்லப்பிராணிகள் மூலமாகவோ, தேங்கிக்கிடக்கும் தண்ணீரின் மூலமாகவோ, தொற்றுநோய்கள் பரவுகிறது. தேங்கி கிடக்கும் நீரில் தொற்றுநோயை உருவாக்கும் பேக்டிரீயாக்கள், வைரஸ்கள், நோயைப் பரப்பும் கொசுக்கள் மூலமாக பரவுகின்றன.இப்பொழுது பரவும் டெங்கு வைரஸ் நோய் கொசுக்களின் மூலமாகவே பரவுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது.
     ஆகவே நீர் தங்காதபடி கவனித்துக் கொள்வது முக்கியமானதாகும். மேலும் நோய்கிருமிகளைக் கொல்லும்  கிருமி நாசினிகளும், நுண்ணுயிர் கொல்லிகளையும் உபயோகித்து நோய் பரவுவதையும், நோயைப் பரப்பும் கொசுக்களையும் ஒழிக்கவேண்டும். கையை சுகாதாரமாக வைக்க நகங்களை வெட்டி சுத்தம் செய்யவேண்டும். உணவுக்கு முன் கையை சோப்பு மற்றும் நீர் கொண்டு சுத்தம் செய்யவேண்டும். சுவாச நோய்களான சளி, இருமல், காசநோய், நுரையீரல் சார்ந்த நோய்கள் இருக்கும்பொழுது, இருமல் அல்லது தும்மல் வரும்பொழுது கைக்குட்டை அல்லது டிசு பேப்பரால் மறைக்கவேண்டும். பின்னர் அவைகளை சுத்தம் செய்யவேண்டும். கையையும் சுத்தமாக கழுவவேண்டும்.
உணவும், சுகாதாரமும்:- உணவுப் பொருள்கள் நோய்க் கிருமி தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு அவற்றை நுண்ணுயிரிகள், செல்ல பிராணிகள், வீட்டில் உள்ள பூச்சிகள் ஆகியவற்றில் இருந்து தொடர்பு இல்லாமல் வைக்கவேண்டும். சமைப்பதற்காக வைத்திருக்கும் உணவுப் பொருள்களையும் சமைத்து வைத்திருக்கும் உணவுப் பொருள்களையும் ஒன்றோடொன்று சேராமல் பிரித்து வைக்கவேண்டும். உணவில் உள்ள நுண்நோய்கிருமிகள் அழிவதற்கு வேண்டிய வெட்பநிலையையும், நேரத்தையும் தேர்ந்து எடுத்து செயலாக்க வேண்டும். உணவுப் பொருள்களை சரியான முறையில் சேமிக்கவேண்டும். உணவுக்கு சரியான மூலப்பொருள்களை பயன்படுத்த வேண்டும்.
தண்ணீரும், உடல் ஆரோக்கியமும்:- வீட்டு உபயோகத்துக்கு என்று உபயோகப்படுத்தும் தண்ணீர் சரியான முறையில் சேமித்து வைக்கப்படவேண்டும். குடிப்பதற்கு என்று   உபயோகப்படுத்தும் தண்ணீர் நோய் கிருமிகள் இல்லாத பாதுகாக்கப்பட்ட குடிநீராக இருக்கவேண்டும். தேவை என்றால் குடிநீரை கிருமிநீக்கம் செய்ய யூவி லைட்டுகள், பில்டர்கள், குளோரின்,போன்றவைகளால் சுத்தப்படுத்த வேண்டும். சமையல் அறை, கழிப்பறையை சுகாதாரமாக வைக்கவேண்டும். இவைகள் மூலமாக பெரும் அளவில் நோய் கிருமிகள் பரவுவதால் தரைகள், பேசிங்கள், குழாய்கள், கைபிடிகள், கதவுகள் ஆகியவற்றை கிருமிநாசினிகளால் சுத்தம் செய்யவேண்டும். காற்று மூலம் பரவும் பூஞ்சான், காளான்களை கட்டுப்படுத்தவேண்டும். குளியல் அறை, சமையல் அறை, கழிப்பறை, ஆகியவைகள் காற்றோட்டமாக வைக்கவேண்டும். உணவு தயாரிக்கும் முன் பாத்திரங்களை நன்றாக கழுவவேண்டும். உணவுப் பொருள்களை சரியான இடத்தில் சரியான முறையில் சேமிக்கவேண்டும்.
     குளிர் சாதனப்பெட்டியில் அதிக நாள் உணவுப் பொருள்களைச் சேமிப்பது சிறப்பல்ல. இறைச்சி, மீன், போன்றவைகளை காற்று புகமுடியாத பாத்திரத்தில் வைக்கவேண்டும். குளிர் சாதனப் பெட்டியில் திறந்த டின்களில் உள்ள உணவுப் பொருள்களை சேமிக்கவேண்டாம். எந்த ஒரு தயாரிக்கப்பட்ட உணவையும் குளிர் சாதனப் பெட்டிக்குள் இரண்டு நாட்களுக்கு மேல் வைக்கவேண்டாம். வாங்கும் உணவுப்பொருள்கள் தரமானதாகவும், தயாரிப்பு தேதி ஆகியவற்றைப்  பார்த்து வாங்கவும். இவ்வாறு சுகாதாரத்தை பேணும் பொழுது நல்ல ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக